ஈழக்கதாநாயகர்களின் இன்னுமோர் பெயர் மாவீரர்கள். வாழ்வின் உன்னதம் அறிந்தும் உயிர் துறந்த அக்கினிக்குஞ்சுகள்.
தாய் அவள் பாசத்தை மறந்து, தந்தை அவன் அரவணைப்பிலிருந்து விலகி, அண்ணா, அக்கா, தங்கை என்ற எல்லா எல்லைகளையும் கடந்து, அன்பே, கண்ணே, மணியே காதலியே என்ற அந்த காதல் மொழியை மனதிற்குள்ளே கொண்றொழித்து விட்டு ஈழ மக்களின் மீதும் ஈழ மண்மீதும் கொண்ட அந்த பெருங்காதலினால், இன்று காவியமான ஒவ்வொரு வீர புருஷர்களின் கனவுகள் மட்டும்தான் எம் முன்னே உள்ளது.
தொலைதூர பார்வையில் கண்களையும் மனதினையும் ஆழமாக பதித்து விடுதலையின் வித்துக்களாகி மீளாத்துயிலில் உறங்கிக்கொண்டிருக்கும் தமிழீழ மக்களின் காவல் தெய்வங்களே எமது மாவீரர்கள்.
லெப்: சங்கர் அவர்கள் ஆரம்பித்து வைத்த தியாகத்தின் உச்சப் பயணம் நாற்பதாயிரத்திற்கும் மேலான மாவீரர்கள் அணிவகுத்து எமது மனக்கண்முன்னே சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழீழ போராட்டத்திற்கு முழுமையான பங்களிப்பை செலுத்தியவர்கள் இந்த மாவீரர்கள், அது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உதிர்ந்த ஒரு அற்புதமான வரிகள்.
ஒரு உண்மையான ஈழத்தமிழன் ஈழப்போராட்டத்தின் பெறுமதி அறிந்து அதன்பால் உள்வாங்கப்பட்டு ஆண்டாண்டு காலம் தமிழன் ஆண்ட நிலத்தை எதிரியின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது உண்டாகிறதோ அன்றே அவன் தமிழீழநாட்டின் உண்மையான வித்தாகி விடுகிறான்.
அந்தப் போராளியானவன் மண்ணின் மீது உலாவரும் போது அவன் தனக்கு மீறிய பணிகளைச் செய்து பின் வீரச்சாவை தழுவிய பின்னும் அவன் நேசித்த அந்த மண்னுக்குள் அடக்கமாகி அங்கு ஒரு விருட்சத்திற்கான வித்தாகி விடுகிறான். அவனை நேசித்த எத்தனையோ உறவுகள் அவன் தூக்கிய ஆயுத்தை தூக்கி அணிவகுத்து நிற்கின்றனர்.
நவம்பர் 27ல் தமிழீழத்தின் வராற்றில் என்றும் நிலைபெற்ற மிகப்பொரும் மனிதர்களை நினைவுகூறும் நாள் மட்டும் இல்லாமல் இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யப்போகின்றோம் என நினைவூட்டும் நாள். எமது தேசியத் தலைவரின் தரிசனத்திற்காக தமிழீழ மக்கள் மட்டுமல்லாது உலகமே ஏங்கும் நாள். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அதுவும் மாவீரர்களுக்காக மட்டுமே சூரியத் தேவன் உதிக்கும் நாள்.
நாம் எல்லாம் அணிவகுத்து அந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யும் அந்த நாளில் நாம் அவர்களுக்கான எதையாவது செய்து அவர்களின் பயணத்தை பூர்த்தி செய்துள்ளோமா? என்று எம்மை நாமே கேட்டால் இல்லை என்பதுதான் பதில். எம் இனிய தமிழீழ உறவுகளே... ஆண்டாண்டு காலம் அழுது புலம்பினாளும் மாண்டவர்கள் திரும்பி வரப்போவதில்லை, ஆனால் அவர்களின் இலட்சியத்தை கோடான கோடி ஆண்டுகளுக்கு வாழ வைத்துவிட முடியும். அது இப்போது எம் எல்லோர் கைகளில்தான் தங்கியுள்ளது. இன்னுமோர் முறை எமக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை இந்தப்புனிதர்களுக்கு கைமாறுசெய்வதற்கு.
எனவே எமக்குள் எழும் எந்த ஒரு கருத்து வேறுபாடுகள் வரும்போதும் அல்லது பின்னடைவுகள் வரும்போதும் இந்த மாவீரர்களின் ஒவ்வொருவரினது முகத்தினையும் உங்கள் அகக்கண்களில் கொண்டுவந்து நிறுத்துங்கள் தடைகள் தானகவே உடையும் அவர்களது இலட்சியம் வெகுவிரைவில் ஈடேறும் மாவீரர் கனவு நனவாக வாருங்கள் உறவுகளே எல்லோரும் கைகோர்ந்து நிற்போம்.
ஓர் நாள் நாம் எல்லோரும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றிவிட்டு அவர்களின் கல்லறைகள் முன் நின்று உங்கள் இலட்சியங்ளை நிறைவேற்றிவிட்டோம் இப்போது எழுந்து வாருங்கள் என கண்ணீர் சிந்தி அவர்களிடம் கேட்போம்.
இலட்சியங்கள் தொடரும்....
|