வன்னியில் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் மரணச் சான்றிதழ்கள் அவா்கள் மரணமான திகதிக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னாலுள்ள திகதியில் பதியப்படுகின்றது.
வன்னியில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற கடந்த ஆண்டு 5ம் மாதப் பகுதியில் அதிகளவான தமிழர்கள் கொல்லப்பட்டனர். எனினும் இவர்களுக்கான மரணச் சான்றிதழ்கள் 3ம் மாதம் புலிகளின் கட்டுப்பாடு இருந்தகாலத்தில் நடைபெற்றதாக பதியப்படுகின்றன.
இது போன்ற சம்பவம் கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள ஒருவருக்கு நடைபெற்றுள்ளது. இவருடைய கணவர் உட்பட ஜவர் கடந்த ஆண்டு 5ம் மாதம் 15ம் திகதி செல்வீச்சில் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் மரணச்சான்றிதழ் 3ம் மாதத்தில் கொல்லப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.
இது குறித்துக் கேட்டபோது தமக்கு அப்படித்தான் பதியும்படி மேலிடம் கூறியுள்ளதாக மரண விசாரணை அதிகாரியும் கிராமசேவகரும் கூறியுள்ளனர்.
இறுதிக்கட்டப் போரின்போது கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களின் தொகையை குறைத்துக்காட்டும் நோக்கிலும், சர்வதேசத்தினால் முன்வைக்கப்படும் போர்க்குற்றங்களிலும் இருந்து தப்பிக்கவுமே இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக மக்கள் பலரும் கூறுகின்றனர்.