இன்றைய திகதி



உயிர்த்தெழும் புலிகள்!

புலிகளின் உளவுத்துறை vs தமிழக உளவுத்துறை

சஞ்சீவி, தமிழ் உள்ளிட்ட நால்வரை விடுதலைப் புலிகள் என்று சொல்லி தமிழக ‘க்யூ’ பிரிவு காவல்துறை சமீபத்தில் கைது செய்தது.

விடுதலைப் புலிகள் அழிக்கப்-பட்டதாக ராஜபக்ஷே பெருமிதப்-பட்டபோதும்... அவரது சிங்கள அமைச்சர்கள் பலரும், புலிகளின் சர்வதேச நெட்வொர்க் இன்னும் இருப்பதாக அறிவித்தபடிதான் இருக்கின்றனர். இந்தியாவும் ‘அழிக்கப்பட்ட’ புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மறுபடியும் நீட்டித்திருக்கிறது. இந்த நிலையில்தான்... புலிகளின் அபிமானிகளைத் தாண்டி புலிகளின் உளவுத் துறை தமிழ்நாட்டில் முன்பை விட முழு-மூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

இதுபற்றி ஈழ உணர்வாளர்கள், அகதி முகாம்களில் வசிப்பவர்கள், போருக்குப் பின் ஈழத்திலிருந்து தமிழகம் வந்து தற்பொழுது வெளிப்பதிவில் வசித்து வருபவர்கள் உட்பட பலரிடமும் பேசினோம்.

“முள்ளிவாய்க்காலோடு புலிகளது சகாப்தம் முடிந்து விட்டது என்று இலங்கை அரசு உலகுக்கு கூறி வருகிறது. இதுதான் பலரும் நம்பிக் கொண்டிருக்கின்ற விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் சமருக்கு முன்பே அனந்தபுரத்தில் நடந்த சமர் பலர் அறியாத விடயம். அதுதான் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட தளபதிகளின் விடை தெரியாத வினாவுக்கு பதில். அந்த சம்பவம், விரைவில் வெளிவரும்’’ என எடுத்த எடுப்பிலேயே புது புதிர் போட்டுவிட்டு பேச ஆரம்பித்தார்கள். ‘‘புலிகளில் பலர் புலிகள் என்று அடையாளம் தெரியாமல் இலங்கை முழுவதும் வியாபித்துள்ளனர். அவர்களில் சிலர் தமிழகம் வந்துள்ளது உண்மை.

இப்பொழுது அவர்களின் பணி முகாம்களில் துடிப்புடன் இருக்கும் இளைஞர்கள் தமிழகத்தில் ஈழ வேட்கையுடன் இருக்கும் இளைஞர்கள் ஆகியோரை ஒன்றிணைப்பதுதான். மேலும் உலகம் முழுவதும் புலிகளின் உளவுப் பிரிவு செய்திகளை ஒன்றிணைக்க நவீன இணைய தளம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அனைவராலும் பார்க்க முடியாதபடியும், இணைய தளப் பேச்சுக்களை பதிவு செய்ய முடியாத படியும் அது கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக உளவுத்துறை, புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள் யார்? அப்பாவி அகதிகள் யார்? என்று அறிந்து கொள்ளாமல் அகதிகளையும், வெளிப்பதிவில் உள்ளவர்களையும், அச்சுறுத்தி கைது செய்வது, பணம் கேட்டு மிரட்டுவது என ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் கைது செய்யப்பட்ட தமிழ் மீது எவ்வித குற்றச்சாட்டோ, வழக்குகளோ கிடையாது. ஆனால் அவரை புலிகளின் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் என்று கைது செய்துள்ளனர்” என்றனர்.

இந்நிலையில் தமிழ் உள்ளிட்டோரின் கைது பற்றியும் வேறு சில தகவல்கள் கசிகின்றன.

‘‘இவர்களில் தமிழ் மட்டுமே திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரில் ஒருவர் பவானி சாகரிலும், ஒருவர் மற்றொரு ஊரிலும் கைது செய்யப்பட்டு திருச்சியில் கைது செய்யப்பட்டதாகக் கூறி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ் முறையாக இலங்கை அரசின் அனுமதி பெற்றும், தமிழகத்தில் பதிவு பெற்றும் வசித்து வந்தவர்.

பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்த இவரை புலிகளின் உளவுத்துறை என்று கைது செய்துள்ளனர். ஆனால் மற்ற இருவர் பதிவில்லாமல் இங்கிருந்தவர்கள். தமிழ் வசிப்பதற்கு போதிய ஆவணங்கள் முறையாக இருப்பதும், அவர் மீது எவ்வித வழக்கும் இல்லாததால் ‘க்யூ’பிரிவு காவல்துறையினர் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், பொதுவாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளரை கைது செய்தால் அவர் அகதிகள் முகாம்களில் யாருக்காவது உறவா, நட்பா என்றெல்லாம் பெரிய அளவில் விசாரணைகள் நடக்கும். மேலும் முகாம்களில் தங்கியிருக்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வேறு இயக்கங்களின் முன்னாள் போராளிகளை அழைத்து சென்று கைது செய்யப்பட்டவர்கள் கூறும் தகவல்களை கிராஸ் செக் செய்து கொள்வார்கள். இந்த கைதில் இது போன்று எதுவும் நடக்கவில்லை. மேலும் அவர்களிடம் இருந்து டெட்டனேட்டர் கைப்பற்றப்பட்டதாக சொல்லும் தகவல் ஒன்றே இந்த கைதுகள் நாடகம் என்பதற்கு போதுமானது.

இதற்கு அவர்கள் கூறும் காரணம் டெட்டனேட்டர் தொழில்நுட்பத்தைவிட மேம்பட்ட தொழில்நுட்பத்தை எல்லாம் 1990 ஆரம்பத்திலேயே புலிகள் பயன்படுத்த தொடங்கி-விட்டனர். பொதுவாக டெட்டனேட்டர் என்பது பிக்பாக்கெட் அடிப்பவர்கள் பயன்படுத்தும் பிளேடுக்கு சமம். எனவே க்யூ பிரிவு போலீஸாரின் ஒரு நாடகம்தான் இது.

மேலும், விடுதலைப் புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த சிரஞ்சீவி மாஸ்டர் கைது விவகாரத்திலும் சந்தேக நெடி தூக்கலாகவே அடிக்கிறது. இறுதிப் போரில் கை, கால்கள் மற்றும் உடலில் பெரும் காயம் அடைந்த சிரஞ்சீவி, விசா பெற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்து காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தபோது கியூ பிரிவு போலீசார் கைது செய்ததாக முதலில் தெரிவித்தனர். ஆனால் இதற்கு முன்பு கள்ளத்தோணி மூலம் தூத்துக்குடி வந்து ஒரு தனிவீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சிரஞ்சீவி மாஸ்டரை சுற்றி வளைத்து பிடித்ததாக தெரிவித்து இருந்தனர்.

சிங்கள உளவுத் துறையும் இந்திய உளவுத்துறையும் ஒருங்கிணைந்து செயல்படும் நேரத்தில்... உடலில் காயத்தோடு ஒருவர் விமானம் மூலம் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கவே முடியாது. இதுவும் நாடகம்தான்’’ என்றனர்.

க்யூ பிரிவு போலீஸாரிடம் பேசியபோது, ‘‘எங்களின் தொடர் கண்காணிப்புக்குப் பிறகுதான் இந்த விவகாரத்தில் சில கைதுகள் நடந்துள்ளன. நாங்கள் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்’’ என முடித்துக் கொண்டனர்.

மேலும் நம்மிடம் பேசிய அகதி முகாம்களில் வசிக்கும் சிலர்... ‘‘திருச்சியில் ஈழ உணர்வாளர் என்று அடையாளம் காட்டிக் கொண்டு, ஒரு இயக்கத்திலும் பொறுப்பில் இருக்கிற இரண்டு பேர்தான் (ஒரு ஆணும், ஒரு பெண்ணும்) ‘க்யூ’பிரிவுக்கு தகவல் அளிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை புலிகளின் உளவுத்துறை நெருங்கிவிட்டது.

இந்த கறுப்பாடுகள் மூலம் ஒரு சிலர் கைது செய்யப்பட்டாலும் ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். இன்று தமிழுலகம் முழுதும் வியாபித்திருக்கும் புலிகள் இயக்கம் வெறும் 12 பேருடன் துவக்கப்பட்ட இயக்கம் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விடயம்’’ என்று முடித்தனர் அவர்கள்.

நன்றி: தமிழக அரசியல்

World newsSports

நேற்று இன்று நாளை


தமிழீழத் தேசியத்தலைவர் ஈழ மக்களின் இதயங்களை வென்ற கதாநாயகனாக மூன்று தசாப்தமாக இருந்து வந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கான பல காரணங்கள் முன்வைக்கலாம். எனினும் சுறுக்கமான விளக்கம் என்று சொன்னால் மேதகு... மேலும்

இளைய சமுதாயமே

உலகமெங்கும் வாழும் எம் தமிழ் இளையோர்களே எம் இனத்திற்காக நீங்கள் ஆற்றிய பணிகள் மிகச்சிறப்பானவை. எமது தேசியத் தலைவரின் நன்மதிப்பை பெற்றவர்கள் நீங்களே. எமது தேசியத் தலைவரின்.... மேலும்

எங்கும் தமிழர்

வையகம் எங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் என்ற பெருமை எமக்குண்டு. நாம் சென்ற இடமெங்கும் நமது அடையாளங்களை கலை பண்பாட்டு விழுமியங்களையும் அத்தோடு தேசத்தைவிட்டு வந்துவிட்டோம் ...மேலும்